வரலாறு காணாத வறட்சி!’ - நெல்லையில் 2,518 குளங்கள் வறண்டன.
Source: Vikatan
வரலாறு காணாத வறட்சியின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,518 குளங்களும் வறண்டுகிடக்கின்றன. இதனால், விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, ராமநதி, கடனா, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குப்பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என 11 அணைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 13,765 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்க முடியும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், நீர் இருப்பு 1,659 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், 19.2 சதவிகித நீர் இருப்பு இருந்த நிலையில், தற்போது 12.1 சதவிகித தண்ணீர் மட்டுமே அணைகளில் இருப்பு உள்ளது.
தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தை மட்டும் நம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் இந்த ஆண்டு, பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் குறைவான தண்ணீரே இருப்பதால், நெல் பாசனம் செய்யாமல் விவசாயிகள் மழைக்காகக் காத்திருக்கின்றனர். நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை, சராசரியாக 814 மி.மீ மழை பெய்யும். கடந்த ஆண்டு, இந்த இயல்பான மழையளவைவிடவும் 51 சதவிகிதம் குறைவாகப் பெய்தது. நடப்பாண்டில் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.
Comments
Post a Comment